Massive protest demonstration in Chennai against the unjust Israeli attack on Palestine

 இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க
மத்திய அரசையும், ஐ.நா வையும் வலியுறுத்தி
ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம்!
 

பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேல் தொடர்ந்து பாலஸ்தீனத்தின் பூர்விக குடிமக்களை அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அகதிகளாக்கி அவர்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்து வருகிறது. கடந்த 8 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை 14 நாட்களாக பாலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் கொடூர தாக்குதலில் இதுவரை 500 க்கும் அதிகமான அப்பாவி மக்களும், குழந்தைகளும் பலியாகியுள்ளனர். தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழி மூலமும் கொடூர தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருகிறது.

இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டி தனமான தாக்குதலை இந்தியாவும் ஐ.நா வும் கண்டிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாபெரும் ஐ.நா அலுவலக முற்றுகை போராட்டம் சென்னை அடையாரில் உள்ள ஐ.நா வின் குழந்தைகள் நல அலுவலகமான யுனிசெப் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது; அப்பாவி பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் மூர்கத்தனமான தாக்குதலை கடுமையாக கண்டிக்கின்றோம். மேலும் இந்திய அரசானது சியோனிச இஸ்ரேல் உடனான தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை பிராந்தியத்தில் அமைதி திரும்பும் வரை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்ரேல் பெண்கள், குழந்தைகள் என்று கூட பார்க்காமல் அப்பாவி மக்கள் மீது எந்தவகையிலும் ஏற்று கொள்ள முடியாத, வெறுக்கத்தக்க தாக்குதலை நடத்துவதற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தனது வேதனையையும், கடுந்துயரத்தையும் தெரிவித்துக்கொள்கின்றது. பாலஸ்தீன விவகாரத்தில் மனித உரிமைகள் பேணப்படுவதில் உலக நாடுகளின் மௌனம் அவர்களின் பாசாங்குத்தனம் மற்றும் இரட்டை நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

இதேபோல், மத்திய ஆசிய விவகாரங்களில் ஆளும் பா.ஜ.க அரசின் மாறுபட்ட பேச்சுகள் அதிர்ச்சியை தருகின்றன. மேலும் இரண்டு அவைகளிலும் இஸ்ரேலிய படுகொலை கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதை இந்த அரசு மூடிமறைக்க முயன்றபோது அரசின் பாசாங்குத்தனம் வெளிப்பட்டது.

பிரதம மந்திரி நரேந்திர மோடி தனது பிரிக்ஸ் மாநாட்டு உரையில் தனது கவலையை குறிப்பிட்டு, நாடுகளுக்கு இடையேயான மோதல்களை வெறும் வேடிக்கை பார்ப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தனது உரையில் குறிப்பிட்டார். குறிப்பாக மத்திய ஆசியாவில் வாழும் 70 லட்சம் இந்தியர்களை கருத்தில் கொண்டு பிராந்திய அமைதியில் எனது அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த நாளில் இருந்தே இந்தியா பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. இஸ்ரேல் உதயமாகி பல வருடங்களுக்கு டெல்லியில் தூதரகம் தொடங்க இந்தியா அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது. அரபு நாடுகளுக்கு வெளியே இருந்து பாலஸ்தீனை ஆதரித்த முதல் நாடு இந்தியா. 1980 வரை இஸ்ரேலை இந்தியா புறகணித்தது. தற்பொழுது இஸ்ரேலுடன் வலுவான உறவுகளை கொண்டிருந்தாலும் பாலஸ்தீன மக்களின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. ஜனநாயக ரீதியாக 2006 ல் ஹமாஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்ரேல் நடத்தும் மிக கொடூரமான மூன்றாவது தாக்குதல் இது. தற்பொழுது நடைபெறும் தாக்குதலுக்கு காரணம் ஹமாஸ் மற்றும் பாதாஹ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமே என நம்ப படுகின்றது.

1967 ல் இருந்து தனது கட்டுபாட்டில் இருக்கும் பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அப்பட்டமான போர் குற்றமே. இஸ்ரேலை உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தவதும் தனது தாக்குதலை நிறுத்தும் வரையில், ஆக்ரமிக்கபட்ட பகுதியில் இருந்து வெளியேறும் வரை இஸ்ரேலை புறக்கணிப்பது அரபு நாடுகள் மற்றும் மனித உரிமை ஆணையங்களின் கடமை.

காசா பகுதியின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், அப்பாவி பொதுமக்கள் மீது ஏவப்படும் உயிர்கொல்லி ஆயுதங்கள் இவை காலம் காலமாக பரப்புரை செய்யப்பட்ட பாலஸ்தீன மக்கள் அழித்தொழிப்பு நடவடிக்கையின் இறுதிகட்டம். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளை போதுமான அரசியல் மற்றும் தூதரக அழுத்தங்கள் மூலம் இஸ்ரேலின் கொடிய தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது உரையில் அவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தொண்டு ஹனிபா, கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், வட சென்னை மாவட்ட தலைவர் முகம்மது ரஷித், பொது செயலாளர் கரீம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகம்மது நாஜிம், பொது செயலாளர் இஸ்மாயில், தென் சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், பொது செயலாளர் அன்சாரி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஷேக் முகம்மது அலி, பொது செயலாளர் அஹமது, காஞ்சிபுர மாவட்ட தலைவர் பிலால், பொது செயலாளர் அபூபக்கர் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் இஸ்ரேலின் கொடியை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து , இஸ்ரேலை கண்டித்தும் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியும் யுனிசெப் அலுவலகத்தில் ஐ.நா அதிகாரியிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *